<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
நொ - முதல் சொற்கள்
நொ
நொச்சி
நொசி
நொசிப்பு
நொசிவு
நொடி
நொடிவிடுவு
நொடு
நொடை
நொடைமை
நொண்டு
நொதுமல்
நொதுமலர்
நொதுமலாட்டி
நொதுமலாளர்
நொதுமலாளன்
நொந்தீவார்
நொய்
நொய்து
நொய்யார்
நொவ்வல்
நொவ்விதின்
நொவ்வு
நொள்ளை
இடப்பக்கமுள்ள சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நொ - (பெ) நொய்ம்மை, மென்மை, softness, tenderness
தாஅல் அம் சிறை நொ பறை வாவல் - குறு 172/1
வலிமையான அழகிய சிறகுகளையும், மென்மையான பறத்தலையும் கொண்ட வௌவால்

 மேல்
 
    நொச்சி - (பெ) ஒரு சிறு மரம், a multi-leaved chaste tree
1.
இது இன்றைக்கும் காட்டுநிலங்களின் வேலியோரம் வளர்ந்திருக்கும்.
சங்ககாலத்தில் இது வீடுகளில் வளர்க்கப்பட்டது.

மனை நொச்சி நிழல் ஆங்கண் - பொரு 185
மனை மா நொச்சி மீமிசை மா சினை - நற் 246/3
மனை இள நொச்சி மௌவல் வால் முகை - அகம் 21/1
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய - அகம் 367/4
2.
இதன் இலைகள் முன்பகுதியில் மூன்று பிரிவாகப் பிரிந்திருப்பதால் இது மயிலின் கால்களைப்போன்றது
என்று புலவர்களால் பாடப்பெற்றுள்ளது.

மயில் அடி இலைய மா குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற் 115/5,6
மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த - குறு 138/3,4
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்
கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற - நற் 305/2,3

	
3.
நொச்சிப்பூவைக் குயவர்கள் சூடிக்கொள்வர்.
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவ - நற் 200/2-4
ஒளிவிடும் கொத்தினைக் கொண்ட நொச்சி மாலையைச் சூடிக்கொண்டு
ஆறு நீளக் கிடந்ததைப் போன்ற அகன்ற நெடிய தெருவில்
திருவிழா பற்றிய செய்திகளைக் கூறும் முதுமை வாய்க்கபெற்ற குயவனே!

மணி குரல் நொச்சி தெரியல் சூடி
பலி கள் ஆர்கை பார் முது குயவன் - நற் 293/1,2
நீலமணி போன்ற பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் பூமாலையைச் சூடிக்கொண்டு
பலியாக இடப்பட்ட கள்ளைக் குடிக்கும் இந் நிலத்து முதுகுடியைச் சேர்ந்த குயவன்
4.
நொச்சியின் அரும்புகள் நண்டுக்கண்களைப் போல் இருக்கும் என்பர்.

நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இரும் கிளை தொழுதி - நற் 267/1,2
நொச்சியின் கரிய மொட்டுக்களைப் போன்ற கண்களையுடைய
மணல்மேட்டு நண்டின் பெரிய சுற்றத்தோடு கூடிய கூட்டம்,

	

5. நொச்சியின் பூக்கள் மணிகளைக் கொத்துக்கொத்தாய்க் கட்டித் தொங்கவிட்டதைப் போல் இருக்கும் என்பர்.

மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி - புறம் 272/1
மணிகள் கொத்துக்கொத்தாய் அமைந்தாற்போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சி

	

 மேல்
 
    நொசி - (வி) மெலி, சிறுமையாகு, நுண்ணிதாகு, be thin, slender, minute
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள - பரி 9/49
வளைந்து மடங்கும் நுண்ணிய இடுப்பினையுடையவர் போரினை மேற்கொள்ள

நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் - அகம் 229/11
வருத்தம் மிக்கு உதிர்த்த நுண்ணிதாக வரும் சிறிதளவாகிய கண்ணீர்

 மேல்
 
    நொசிப்பு - (பெ) ஆழ்ந்த தியானம், சமாதி, intense contemplation
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து
வசித்ததை கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை_வயின் வசி தடி சமைப்பின்
சாலார் தானே தரிக்க என அவர் அவி
உடன் பெய்தோரே அழல் வேட்டு - பரி 5/36-41
இந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை,
ஆழ்ந்த தியானத்தினால் ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத் தெளிந்து,
பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின்
மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால்
அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, 'தீயே அவற்றைத் தாங்குவதாக' என்று அந்த முனிவர்கள்
வேள்வியுணவாக,
ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து

 மேல்
 
    நொசிவு - (பெ) வளைவு, bend
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் - பதி 45/3
வளைந்த வில்லினையும், வளைந்து முரியாத நெஞ்சினையும்

 மேல்
 
    நொடி - 1. (வி) 1. சொல், கூறு, say, tell
                   2. சொடுக்குப்போடு, snap by joining the thumb with the middle finger
                   3. குறிசொல், say unknown and wise things
                   4. சைகையால் அழை, call by signs
          - 2. (பெ) 1. இசையில் காலவரை காட்டும் ஒலி,  Instant, as the time-measure of the snap of the finger
                   2. ஓசை, noise
1.1.
வென்றி பல் புகழ் விறலோடு ஏத்தி
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர - மலை 544,545
அவனது வெற்றியாலுண்டான பல புகழ்களை அவனது சிறப்பியல்புகளோடு புகழ்ந்து
நீர் அவனிடம் சென்ற காரணத்தையும் முற்றக் கூறவும் பொறாதவனாய்
1.2
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர - அகம் 337/13
குருதியால் சிவந்த கோலாகிய அம்பினையுடைய அவர்கள் கையை சொடுக்குப்போட்டுக்கொண்டு புறம்போக
1.3
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி - பெரும் 459,460
துணங்கைக்கூத்துடைய அழகிய இறைவிக்குப் பேய்மகள் குறிசொன்னாற் போன்று,
குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி,
1.4
அலையா உலவை ஓச்சி சில கிளையா
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள் மடந்தை - நற் 341/4-6
அங்குமிங்கும் ஓடி, காய்ந்த குச்சியை எடுத்து அடிக்க ஓங்கிக்கொண்டு, சில சொற்களைக் கூறிக்கொண்டு இருக்கும்
குன்றக் குறவனின் மகனைச் சிறிய சைகையால் அழைக்கும்
நல்ல துணையை உடையவள் தலைவி!
2.1
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி
நொடி தரு பாணிய பதலையும் பிறவும் - மலை 10,11
அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்
2.2
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி
துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் - குறு 174/2,3
கவைத்த முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் கடிய ஒலிக்கு
நெருக்கமான மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய புறாக்கள் அஞ்சியோடும்

 மேல்
 
    நொடிவிடுவு - (பெ) சொடுக்குப்போடுதல், snapping of the thumb with the middle finger
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி - நற் 314/9
விரல்களைச் சொடுக்குப்போட்டாற்போன்று காய்கள் வெடிக்கும் கள்ளியின்

 மேல்
 
    நொடு - (வி) விற்பனைசெய், sell
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ - அகம் 340/14
பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெல்லின் மா

 மேல்
 
    நொடை - (பெ) 1. விலை, price
                   2. விற்பனை, sale
                   3. பண்டமாற்றுப்பொருள், item of exchange
1.
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி - பெரும் 141
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகப் போக்கி
2.
நறவு நொடை கொடியொடு
பிறபிறவும் நனி விரைஇ - பட் 180,181
கள் விற்பனைக்காகக் கட்டிய கொடியுடன்,								180
ஏனையவற்றிற்குக் கட்டின கொடிகளும் மிகவும் கலந்துகிடப்பதால்
3.
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் - நற் 254/6
உப்பு விற்பவர்கள் கொண்டுவந்த உப்புக்கு மாற்றான நெல்லை

 மேல்
 
    நொடைமை - (பெ) விலையாகத் தருதல், paying towards the cost
வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன்
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து - பதி 68/9-11
பகை மன்னர் ஏறிவரும் யானையைக் கொன்று அதன் வெண்மையான கொம்பினைத் தோண்டியெடுத்து,
கள்ளுக்கடையின் கொடி அசைந்தாடும் கடைத்தெருவில் நுழைந்து உடனே
அரிய கள்ளுக்கு விலையாகத் தந்து கள்ளைப் பெற்று, பின் அதனைக் குடித்து மகிழ்ந்து

 மேல்
 
    நொண்டு - (வி.எ) முகந்து, baling out (as water), measuring out (as grain)
நொள் என்ற வினையின் இறந்தகால எச்சம்.

கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு
பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் - நற் 186/1-3
கல்லில் ஊறும் ஊற்றில் சேர்ந்துள்ள நீரைக் குழியிலிருந்து முற்றிலும் அற்றுப்போகுமாறு உறிஞ்சி,
கரிய சொரசொரப்பான நீண்ட கையை நீட்டி நீரை முகந்துகொண்டு
பெரிய கையையுடைய யானை தன் பிடியை எதிர்கொண்டு ஓடும்

விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு
மனை புறந்தருதி ஆயின் - அகம் 230/7,8
கூடி விளையாடும் உன் தோழியருடன், வெள்ளிய மணலில் உதிர்த்த
புன்னைமரத்தின் நுண்ணிய பொடியினை பொன்னாகக்கொண்டு முகந்து
இல்லறம் நடத்துவாயாயின்

 மேல்
 
    நொதுமல் - (பெ) 1. பற்றின்மை, அக்கறையின்மை, indifference
                     2. அன்புகலவாத சொல், words of an indifferent person
1.
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை		5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் - நற் 54/5-8
பெரும் தனிமைத்துயரத்தைத் தருகின்றது இந்தச் சிறிய புல்லிய மாலைப்பொழுது;
அதனை நீ அறிந்தால் என்மீது அன்புகொள்வாய்;
என் மீது ஓர் அக்கறையற்ற இதயம் கொள்ளாமல், எனது குறையை
இங்கே இருப்பது போல அவர் உணரும்படி சொல்வாயாக
2.
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே - குறு 12/6
அன்பற்ற மொழிகளைக் கூறும் இந்த ஆரவாரமுடைய ஊர்

 மேல்
 
    நொதுமலர் - (பெ) அயலார், strangers
காண் இனி வாழி தோழி யாணர்
கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட
மீன் வலை மா பட்டு ஆங்கு
இது மற்று எவனோ நொதுமலர் தலையே - குறு 171
இதனைக் காண்பாயாக, வாழ்க தோழியே! புதிதாய்
விரைந்துவரும் நீரை அடைக்கும் கரையையுடைய நீண்ட குளத்தில் இட்ட
மீன் வலையில் வேறு விலங்கு சிக்கியதைப் போல்
இது என்ன கூத்து? அயலாரிடத்தான (மணத்துக்கான இம் ) முயற்சி

 மேல்
 
    நொதுமலாட்டி - (பெ) ஒரு அயல் பெண், some stranger woman
துகிலிகை அன்ன துய் தலை பாதிரி
வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி
புது மலர் தெருவு-தொறு நுவலும்
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே - நற் 118/8-11
வண்ணக்கோலின் தலையைப் போன்ற பஞ்சினைத் தலையில் கொண்ட பாதிரியின்
வெண்மையான இதழ்களையுடைய மலர்களில் வண்டுகள் மொய்க்கும்படி ஏந்திக்கொண்டு
புதிய மலர்களைத் தெருக்கள்தோறும் கூவிவிற்கும்
யாரோ ஒரு பெண்ணுக்காக நோகின்றது என் நெஞ்சம்.
	
 மேல்
 
    நொதுமலாளர் - (பெ) அயலார், neighbours
நொதுமலாளர் கொள்ளார் இவையே - ஐங் 187/1
(நாங்கள் உம் தழையுடைகளை அணிந்தால்) அயலார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் இவற்றை

 மேல்
 
    நொதுமலாளன் - (பெ) அன்னியன், a stranger
நெடு_மொழி தந்தை அரும் கடி நீவி
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென - அகம் 17/7-10
மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி,
(ஓர்)அன்னியனின் உள்ளத்தை முழுவதுவாய்ப் பெற்ற என்
சிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள்
வலிமை கொண்டனவோ? - நடந்துசெல்வதற்கு

 மேல்
 
    நொந்தீவார் - (பெ) நொந்துகொள்வார், a person to be blamed
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்_வழி
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் - கலி 73/6,7
மனம் புண்படச் செய்பவன் என்று உன்னை நொந்துகொள்வார் இல்லாதபோது
"நான் தீது இல்லாதவன்" என்று தெளிவிப்பதற்கு வருவாய் -

 மேல்
 
    நொய் - (பெ) 1. நொறுங்கிப்போனது, that can be easily broken
                 2. மென்மையானது, that which is very soft
1.
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி - மலை 446
(உடைப்பதற்கு எளிதான)சுள்ளிக் குச்சிகளைக் கொள்ளியாகத் தீமூட்டி,
2.
தாள் இத நொய் நூல் சரணத்தர் மேகலை - பரி 10/10
காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய்

 மேல்
 
    நொய்து - (வி.மு) ஒடிப்பதற்கு எளிதானது, brittle, சுமப்பதற்கு எளிதானது, very light to carry
தாழ் நீர்
அறு கயம் மருங்கில் சிறு கோல் வெண் கிடை
என்றூழ் வாடு வறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே - புறம் 75/7-10
தாழ்ந்த நீரையுடைய
வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெளிய நெட்டியின்
கோடையில் உலர்ந்த சுள்ளியைப் போலப் பெரிதும்
மெல்லியது ஆகும்.

 மேல்
 
    நொய்யார் - (பெ) அறிவற்றவர், those who lack understanding
தொய்யில் துறந்தார் அவர் என தம்_வயின்
நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு
போயின்று சொல் என் உயிர் - கலி 24/15-17
என் தோளின் கோலத்தைத் துறந்து சென்றார் அவர் என்று அவரைப் பார்த்து
அறிவிலார் சொல்கின்ற பழி அவரோடே கூட நிற்க, அவரோடே
போய்விடும் என் உயிர் என்பதை அவரிடம் சொல்லிவிடு

 மேல்
 
    நொவ்வல் - (பெ) வருத்தம், துயரம், anguish, distress
மயங்கிய
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையில் சிறவாதாயின் - அகம் 98/21-24
வெறியாடும்களத்தில் கூடிய
மயக்கம் பொருந்திய பெண்டிர்க்கு துன்பம் உண்டாக
வேலன் ஆடிய பின்னும் எனது வாடிய மேனி
முன்பு போலச் சிறந்திடாதாயின்

 மேல்
 
    நொவ்விதின் - (வி.அ) எளிதாக, easily3
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்
தவறும் நன்கு அறியாய் - நற் 315/9,10
சிறப்பைக்கொண்டதாகக் கருதப்பட்ட உறவு எளிதில்
தவறாகத் துன்பம் தருவதை நன்கு அறியாதிருக்கின்றாய்

 மேல்
 
    நொவ்வு - (வி) மெலிவாக இரு, be thin and lean
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் - அகம் 388/11,12
மெல்லிதான இயல்பையுடைய அம்பு பாய்ந்ததாக புண் மிக்கு
துன்பத்துடன் வந்த உயர்ந்த கோட்டினையுடைய களிறு

 மேல்
 
    நொள்ளை - (பெ) நத்தை, snail
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் - அகம் 53/8,9
உள்ளிருக்கும் ஊன் வாடப்பெற்ற சுரிந்த மூக்கினையுடைய நத்தைகள்
பொரியரையுடையது போலாக மூடிக்கொண்டிருக்கும் தனிமைகொண்ட நெறியில்

 மேல்